ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...!!!

ராணுவ வீரரின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்...!!!

அருணாசலப்பிரதேசத்தில் உயிரிழந்த தேனியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜெயந்தின் உடல், 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

விமான விபத்து:

தேனி மாவட்டம் ஜெயமங்கலத்தைச் சேர்ந்த ஆறுமுகம் - மல்லிகா தம்பதியினரின் ஒரே மகனான ஜெயந்த், கடந்த 2010ம் ஆண்டு முதல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.  4 ஆண்டுகளுக்கு முன் செல்லஸ்ரீஜா என்பவரை திருமணம் செய்துகொண்டு அருணாலப்பிரதேசத்தில் பணியில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி மாண்டலாவில் ஹெலிகாப்டரில் பயணித்தபோது, பனிமூட்டம் காரணமாக விபத்துக்குள்ளானதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையம் கொண்டு வரப்பட்ட அவரது உடலுக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர், வருவாய்துறையினர், உள்ளிட்டோர் அரசு மரியாதை அளித்தனர். 

அஞ்சலி:

இந்நிலையில் அவரது சொந்த ஊரான ஜெயமங்கலத்திற்கு ஜெயந்தின் உடல் கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அரசு மரியாதையுடன்:

இதனையடுத்து அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.  இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஜெயமங்கலம் மயானம் கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், ராணுவ வீரர்களின் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நிவாரணம்:

ஜெயந்தின் மறைவையொட்டி, அவரது குடும்பத்தினருக்கு 20 லட்ச ரூபாய் நிவாரண நிதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:   புதிய உச்சத்தை எட்டிய தங்கம் விலை...!!