மத்திய அரசின் அக்பத் திட்டத்துக்கு இதுவரை 7,49,899 பேர் விண்ணப்பம்..விமானப்படை தெரிவிப்பு!

மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு 7 லட்சத்து 49 ஆயிரத்து 899 பேர் விண்ணப்பித்துள்ளதாக விமானப் படை தெரிவித்துள்ளது. 

மத்திய அரசின் அக்பத் திட்டத்துக்கு இதுவரை 7,49,899 பேர் விண்ணப்பம்..விமானப்படை தெரிவிப்பு!

முப்படைகளில் 4 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்களும், வன்முறை நிகழ்வுகளும் அரங்கேறின. எனினும், திட்டத்தை திரும்பப் பெற முடியாது என மத்திய அரசு உறுதிபடத் தெரிவித்தது. 

இந்நிலையில், அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய விமான படையில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 24-ஆம் தேதி தொடங்கியதை அடுத்து, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

இதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், அக்னிபத் திட்டத்தில் இதுவரை 7. 5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் பெறப்பட்ட 6 லட்சத்து 31 ஆயிரத்து 528 விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில், இந்த முறை மிக அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும், 7 லட்சத்து 49 ஆயிரத்து 899 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பெண்கள் 20 சதவீதம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்னிபத் திட்டத்திற்கான முதற்கட்ட ஆன்லைன் தேர்வு ஜூலை மாதம் 24-ஆம் தேதி தொடங்க உள்ளது.