சித்து மன்னிப்பு கேட்கும் வரை சந்திக்க மாட்டேன்... அமரீந்தர் சிங் பிடிவாதம்...
நவ்ஜோத் சிங் சித்து மன்னிப்பு கேட்கும் வரை அவரை சந்திக்க போவதில்லை என்ற நிலைப்பாட்டில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விடாப்பிடியாக இருக்கிறார்.

மோடியின் வருகையை யொட்டி அவருடனான சந்திப்பை தவிர்க்கும் விதமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பெங்களூரு சென்றுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
மத்திய பாஜக அரசை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். மேலும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு மாற்றாக மாநில கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியிலும் சந்திரசேகர ராவ் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஹைதராபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றின் 20வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிலையில், மோடியின் வருகையையொட்டி அவருடனான சந்திப்பை தவிர்க்க, சந்திரசேகர ராவ் பெங்களூரு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ஒருமுறை மோடி வருகையின்போது உடல் நலனை காரணம் காட்டி சந்திரசேகர ராவ் மோடியை சந்திப்பதை தவிர்த்திருந்த நிலையில் தற்போது மீண்டும் தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடக மாநிலம் மங்களூரில் கல்லூரிக்கு இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதாக கூறி கல்லூரி வளாகத்திற்குள் இந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் கர்நாடக அரசு பள்ளி மற்றும் பியூ கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்து புதிய சீருடை சட்டத்தை அமல்படுத்தி கர்நாடக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது.
இதை எதிர்த்து மாணவிகள் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் பலர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஹிஜாப் தடை தொடர்பான ஆணை செல்லும் என கடந்த மார்ச் 15 ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு மாநிலம் முழுவதும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடையை கர்நாடக அரசு தீவிரமாக அமல்படுத்தியது.
கர்நாடக அரசு கொண்டு வந்த சீருடை சட்டம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்பு 12 ஆம் வகுப்பு வரை மட்டுமே செல்லும் என்ற நிலையில் பட்டப்படிப்பு மாணவிகள் வழக்கம் போல ஹிஜாப் அணிந்து கல்லூரியில் படித்து வந்தனர்.
இந்நிலையில் மங்களூருவில் உள்ள மங்களூரு பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டப்படிப்பு படித்து வரும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து கல்லூரி வளாகத்திற்குள் இந்து மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உடுப்பி மாவட்டத்தில் தனியார் பியூ கல்லூரியில் கல்லூரி வளர்ச்சி குழு எவ்வாறு சட்டம் இயற்றி ஹிஜாப் அணிந்து வர தடை விதித்ததோ அதேபோல் இந்தக் கல்லூரியின் வளர்ச்சி குழு சட்டத்தை இயற்றி ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவில் செல்போன் திருடியதாக இளைஞரை லாரியின் முன்புறம் கட்டி ஓட்டிச்சென்ற கொடூர சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்துக்கு உட்பட்ட திகர்பங்கா கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பகுதி நேர டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 22ஆம் தேதி ஜெகத்சிங்பூர் மாவட்டத்தில் லாரி டிரைவர்களிடம் வேலை கேட்டுள்ளார். பாரதீப் துறைமுகம் அருகே உள்ள புடாமண்டல் பாலத்துக்கு அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் டிரைவர்களிடம் வேலை கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஒரு டிரைவர் தனது செல்போனை காணவில்லை என சத்தம்போட்டார். உடனே சில டிரைவர்கள் சேர்ந்து அந்த இளைஞரை பிடித்து, அவர்தான் செல்போனை திருடியதாக கூறி சரமாரியாக அடித்து உதைத்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய கழுத்தில் செருப்பு மாலையை அணிவித்தனர். பின்னர் ஒரு லாரியின் முன்புறம் கயிற்றால் அவரை கட்டி லாரியை ஓட்டிச்சென்றனர். 3 கி. மீ. தூரத்துக்கு ஊர்வலமாக அழைத்துச்சென்ற அவர்கள் பின்னர் அவிழ்த்து விட்டனர்.
லாரி டிரைவர்கள் செய்த இந்த கொடூர செயலை, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த பயங்கர சம்பவத்தை நிகழ்த்திய லாரி டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ பதிவை பார்த்த போலீசாரும் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணையில் இறங்கினர். மாநில மனித உரிமை ஆணைய அதிகாரிகள், தானாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார்.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சீன பிரஜைகளுக்கு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக கடந்த 17ஆம் தேதி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்பின், சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல் விதித்து கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வெளிநாடு சென்ற கார்த்தி சிதம்பரம் நாடு திரும்பிய 16 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜராகி உள்ளார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பணவீக்கம் அதிகரிப்பு எதிரொலியாக, ஜி.எஸ்.டி. விகிதத்தை மாற்றியமைப்பது தாமதமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் 4 நிலைகளில் ஜி.எஸ்.டி. வசூலிக்கப்படுகிறது. அதாவது 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என 4 நிலைகளில் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த 4 நிலைகளை மாற்றியமைக்க, அதாவது 3 நிலைகளாக குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன்மூலம் சில பொருட்களின் வரி விகிதத்தை அதிகரிக்கவும், சில பொருட்களின் விகிதத்தை குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.
ஆனால் தற்போது நாட்டின் பணவீக்கம் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக உள்ளது. இதனால் இந்த ஜி.எஸ்.டி. விகித மாற்றியமைப்பு தாமதமாகும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.