நாட்டில் சமையல் எண்ணெய்-க்கு கடும் தட்டுப்பாடு.. சோயா, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதி!!

நாட்டில் சமையல் எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் 20 லட்சம் மெட்ரிக் டன் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை வரியில்லா இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

நாட்டில் சமையல் எண்ணெய்-க்கு கடும் தட்டுப்பாடு.. சோயா, சூரியகாந்தி எண்ணெய்  இறக்குமதிக்கு அனுமதி!!

ரஷ்யா, உக்ரைனில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் மற்றும் அர்ஜென்டினா, பிரேசிலில் இருந்து சோயா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.

இந்தியாவுக்கு உக்ரைனில் இருந்து ஆண்டுக்கு 190 கோடி லிட்டரும், ரஷ்யாவில் இருந்து 50 கோடி லிட்டரும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையில் கடந்த  போர் நடைபெற்று வருவதால் உக்ரைனில் இருந்து சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள  நிலையில், ரஷ்யாவில் இருந்து குறைவாகவே இறக்குமதி செய்யப்படுகிறது.

இதன் எதிரொலியாக நாடு முழுவதும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 3 மாதங்களில் சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. போர் காரணமாக பல நாடுகளில் பாமாயில் தேவை அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தையில், அதன் விலையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்யை வரியின்றி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 2023-24 நிதியாண்டில் தலா 20 லட்சம் மெட்ரிக் டன்கள் வரை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.