பள்ளி உரிமையாளர்களின் பரிதாப நிலை..! வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு விஷம் குடித்து தற்கொலை..!

இறப்பதற்கு முன்பு கதறி அழுத தம்பதி..!

பள்ளி உரிமையாளர்களின் பரிதாப நிலை..! வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு விஷம் குடித்து தற்கொலை..!

கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் நம் காதுகளில் ஒலித்த ஒரு வார்த்தை. கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் இன்று பேரிடியாய் ஒலித்துக் கொண்டிருக்கும் ஒரு வார்த்தை. செல்வம் படைத்தவர்களை ஏழ்மை நிலைக்கும், ஏழ்மையானவர்களை அதள பாதாளத்திற்கும் தள்ளிய ஒரு வார்த்தை கொரோனா. சைனாவில் இருந்து பரப்பி விடப்பட்டதா அல்லது பரவியதா என்பதை இன்று வரை கண்டுப்பிடிக்க முடியவில்லை. கோடிக்கணக்கானவரை தொற்றிக் கொண்டு, பல லட்சம் மனிதர்களை காவு வாங்கிக் கொண்ட இந்த ஒற்றை வைரஸின் முதல் அலை, இரண்டாம் அலையை தொடர்ந்து மூன்றாவது அலையை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். கொரோனா மட்டுமின்றி அதன் அடுத்த வெர்சனாக டெல்டா வகை கொரோனா என உருமாறி, பெயர் மாறி இன்றும் மனிதனை தெறித்து ஓட வைத்துக் கொண்டிருக்கிறது இந்த கொரோனா.

ஏழ்மை, பணக்காரன், நட்சத்திரம், தலைவர் என பாராது அனைவரையும் பிடித்துக் கொண்ட கொரோனாவால், இன்று மனித உலகமே முழு முகத்தை வெளியில் காட்ட முடியாமல் பாதி மறைத்தே திரிய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் ஒருபுறம் என்றால், கொரோனாவை பரவாமல் தடுக்க ஊரடங்கை பிறப்பித்ததால், வாழ்வாதாரம் இன்றி தவித்து இனி செய்வது அறியாது உயிரை மாய்த்துக் கொண்டவர்களும்  மறுபுறம் இருக்கத் தான் செய்கிறார்கள். 

அந்த வகையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா ஊரடங்கால்,  வாழ்வாதாரத்தை இழந்தது மட்டுமல்லாது, ரூ.2கோடி கடன் பிரச்னையில் சிக்கிய தம்பதி விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது முதல் இன்று வரை பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. பொதுவாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறை என்றாலே ஆனந்தத்தில் துள்ளி குதிப்பர். ஆனால் இப்போது குழந்தைகளும், மாணவர்களும் எப்போது பள்ளி, கல்லூரிகள் திறக்கும் என காத்துக் கிடக்கின்றனர். கொரோனாவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களில் தனியார் பள்ளி உரிமையாளர்களும், அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

என்னதான் ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டாலும் கூட, கல்வி கட்டணம் வசூலிக்க முடியாததால் இனி எப்போது கல்வி கூடங்கள் திறக்கும் என எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கின்றனர். ஆந்திர மாநிலம் கர்னூலை சேர்ந்த தம்பதியான சுப்பிரமணியம்-ரோகினி, தாங்கள் வசிக்கும் கோலிகுண்டலா நகரில் ’’லைப் எனர்ஜீ’’  என்ற பெயரில் ஆங்கில வழி பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தார்கள். பள்ளி சிறப்பாக செயல்பட்டதால், கடந்தாண்டு ஜனவரியில் பள்ளியை விரிவுப்படுத்த, ரூ.2 கோடி ரூபாய் கடன் பெற்றிருக்கிறார்கள் இந்த தம்பதி. கட்டடப்பணிகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. 

அரசு அறிவுறுத்தலின் படி ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கூட, கல்விக் கட்டணம் குறைவாகவே பெற முடிந்திருக்கிறது. பிறகு ஒரு காலகட்டத்திற்கு பிறகு அதுவும் இல்லாமல் இருந்து வந்திருக்கிறது. இதனால் வாங்கிய கடனுக்கு வட்டி கூட செலுத்த முடியாமல் சுப்பிரமணியம்-ரோகிணி தம்பதி அவதிப்பட்டு வந்த நிலையில், கடன் கொடுத்தவர்களும், கடனை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து நொந்து போன தம்பதி, விஷம் அருந்தி தற்கொலை செய்துக் கொண்டனர். 

தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பு, இருவரும் சேர்ந்து ஒரு வீடியோ ஒன்றை பேசி, வாட்ஸ் அப்-மூலம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியிருக்கின்றனர். கடந்த 16-ம் தேதி இருவரும் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த அவர்கள், காரில் அமர்ந்தப் படி கதறி அழும் அந்த தம்பதி, கடன் அதிகமாகிவிட்டதால், எங்களால் நெருக்கடியில் வாழ முடியவில்லை, இதனால் எங்களுக்கு தற்கொலை தவிர வேறு வழியில்லை எனக் கூறியுள்ளனர். மேலும் அனைவரும் எங்களை மன்னித்துவிடுங்கள் எனக் கூறிய தம்பதி காரில் அமர்ந்த படியே விஷம் அருந்தியுள்ளனர். வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தப் போது இருவரும் உணர்ச்சிகளற்று இருந்திருக்கின்றனர். அவர்களை மீட்டு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இருவரும் இறந்து விட்டதாக கூறியிருக்கின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆக்சிஜன் கிடைக்காமல் கொரோனாவின் இரண்டாம் அலைக்கு கொத்து கொத்தாய் மக்கள் இறந்ததை பார்த்ததை விட, இப்படி படித்தவர்கள், நல்ல நிலைமையில் இருந்தவர்கள் தற்கொலை செய்துக் கொள்வதை பார்க்கும் போதோ, கேட்கும் போதோ மனம் ஏதோ மிகுந்த வருத்தத்திற்கு ஆளாகிறது.