சபரிமலை ஆன்லைன் முன்பதிவு.. கேரள உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

சபரிமலை கோவிலில், பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவை திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் முழு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சபரிமலை ஆன்லைன் முன்பதிவு..  கேரள உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

பத்தனந்திட்டாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கான ஆன்லைன் முன்பதிவு பொறுப்பினை கேரள காவல்துறை கவனித்து வருகிறது.

ஆனால் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆன்லைன் முன்பதிவு செயல்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தி இந்து அமைப்புகள் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்தநிலையில், இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது.  இதில் கருத்து தெரிவித்த நீதிமன்றம், சபரிமலையில் ஆன்லைன் முன்பதிவு செயல்முறையை அமல்படுத்தவும், அதனை கட்டுப்படுத்தவும் கேரள காவல் துறைக்கு எந்த அதிகாரமும் இல்லை என சாடியது.

மேலும் சபரிமலை கோவில் விவகாரத்தில் தலையிட கேரள அரசுக்கோ, காவல்துறைக்கோ அதிகாரம் இல்லை என விளக்கிய உயர்நீதிமன்றம் கோவிலை  நிர்வகிக்கவும், முழு கட்டுப்பாட்டில் வைக்கவும் திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக தெளிவுப்படுத்திய நீதிமன்றம், சபரிமலை தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு உள்பட அனைத்தையும் தேவஸ்தானத்தின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டது.