உஜ்வாலா திட்டத்தில் 12 சிலிண்டருக்கு-தலா ரூ.200 மானியம் வழங்கப்படும்:நிதியமைச்சர் தெரிவிப்பு!

தொடர்ந்து, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்ந்து வந்த நிலையில், உஜ்வாலா திட்டத்தில் 12 சிலிண்டருக்கு தலா 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

உஜ்வாலா திட்டத்தில் 12 சிலிண்டருக்கு-தலா ரூ.200 மானியம் வழங்கப்படும்:நிதியமைச்சர் தெரிவிப்பு!

அண்மை காலமாக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் 2 முறை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் கேஸ் சிலிண்டரின் விலை 3 ரூபாய் உயர்ந்து 1 ஆயிரத்து 18 ரூபாய் 50 காசுக்கு விற்பனையாகிறது. இதனால், இல்லத்தரசிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.  

இந்த விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள், சிலிண்டர்களுக்கான மானியத்தை மத்திய அரசு நிறுத்தியதே விலை ஏற்றத்துக்கு காரணம் என குற்றம்சாட்டின.

இந்நிலையில், இந்த ஆண்டு "பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா" திட்டத்தின் கீழ் 9 கோடி பயனாளர்களுக்கு வருடத்திற்கு தலா 12 சிலிண்டர் எனும் வீதம் ஒவ்வொரு சிலிண்டருக்கும் 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதற்கு வரவேற்பு தெரித்துள்ள பிரதமர் மோடி, உஜ்வாலா யோஜனா திட்டம் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உதவியுள்ளது என்றும் உஜ்வாலா மானியம் குறித்த முடிவு குடும்ப பட்ஜெட்டை பெரிதும் எளிதாக்கும் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.