"ராம நவமி விழா".. குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றம்!!

குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் ராம நவமி விழாவையொட்டி வகுப்புவாதக் கலவரங்கள் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். கல்வீச்சு மற்றும் தீ வைப்புச் சம்பவங்கள் நடந்தேறி சில பகுதிகளில் ஊரடங்கு அமலாகியுள்ளது.

"ராம நவமி விழா".. குஜராத் உள்ளிட்ட 4 மாநிலங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேற்றம்!!

ராமர் பிறந்தநாளான ராம நவமி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

சிறப்பு பூஜைகள், தேரோட்டம் என பல்வேறு பகுதிகளில் பக்தியுடன் விழா நடந்தாலும்  குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மட்டும் அது வன்முறையில் முடிந்தது.

மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் ஒலிபெருக்கியில் பாடல் போடுவதன் மூலம் கலவரம் உருவானது. இரு தரப்பினர் இடையே கல் வீச்சு, வீடுகள், வாகனங்களுக்கு தீ வைப்பு என மோதல் நிகழ, காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசி  கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சில பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில், ஆனந்த் மாவட்டத்தின் கம்பாத் மற்றும் சபர்கந்தா மாவட்டத்தின் ஹிம்மத்நகர் ஆகிய இடங்களில் மோதல்கள் நடந்தன. இரு தரப்பு மோதலில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார். மேற்கு வங்கம் ஹவுராவின் ஷிப்பூர் பகுதியில் மோதல்கள் ஏற்பட்டாலும் காவல்துறை விரைவான நடவடிக்கை எடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் காவல்துறை மீது பாஜக குற்றம்சாட்டியது.

ஜார்கண்ட் மாநிலத்தின் லோஹர்டகாவில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் பலர் காயமடைந்துள்ளதாகவும், அவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.