
பாலியல் வன்கொடுமையாளர்களை பாதுகாக்கும் கீழ்த்தரமான அரசியலைச் செய்ய வெட்கமாக இல்லையா என பிரதமர் மோடியை நோக்கி காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
பில்கிஸ் பனோ வழக்கு:
கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில், 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பனோ என்ற இஸ்லாமியப்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு 3 வயது குழந்தை உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். இதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் 15 ஆண்டுகால சிறை வாசத்துக்குப்பின் குஜராத் அரசு சமீபத்தில் விடுவித்தது.
அறிக்கை வெளியிட்ட பெண்:
தொடர்ந்து, விடுதலை ஆன 11 பேருக்கும் அவரவர் குடும்பத்தார் ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்ட நிலையில், நீதித்துறை மீதான தனது நம்பிக்கை அசைக்கப்பட்டு விட்டதாக பில்கிஸ் பனோ அறிக்கை வெளியிட்டார்.
சர்ச்சைக்கருத்து:
இந்நிலையில் விடுதலை முடிவை முன்மொழிந்த பரிந்துரைக் குழுவில் இடம்பெற்ற சி.கே.ராவோல்ஜி என்ற பாஜக எம்எல்ஏ, 11 பேரும் பிராமணர்கள் என்பதால் நல்லவர்கள் என சர்ச்சைக்கருத்து வெளியிட்டார்.
ராகுல் விமர்சனம்:
இதைத்தொடர்ந்து உன்னாவ் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியான பாஜக எம்எல்ஏ ஆதரிக்கப்பட்டதையும், கத்துவாவில் 8 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் வன்புணர்வாளர்களை ஆதரித்து பேரணி சென்றதையும் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், தற்போது ”கூட்டு பாலியல் வழக்கில் கைதான 11 பேர் உச்சபட்ச மரியாதையுடன் விடுவிக்கப்பட்டதாகவும், வன்புணர்வாளர்களை காப்பதுமே பாஜகவின் வேலையா? ” எனவும் கேள்விகளை எழுப்பி அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஏற்கனவே, பாஜக மீது மத அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், தற்போது பாஜக எம்.எல்.ஏ, பிராமணர்கள் என்றாலே நல்லவர்கள் என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.