புதுச்சேரி துணை ஆளுநராக தமிழிசை பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததால் முதலமைச்சர் ரங்கசாமி புகழாரம்!!

புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை எந்த ஒரு கோப்பையும் தாமதப்படுத்தியதில்லை என புதுவை முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணை ஆளுநராக தமிழிசை பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்ததால் முதலமைச்சர் ரங்கசாமி புகழாரம்!!

புதுவையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சரவைக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் அதிகார மோதல் நீடித்ததது. இதையடுத்து, அவர் கடந்தாண்டு பிப்ரவரி 16ம் தேதி ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதன்பின் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனித்து கொண்டார்.

இந்தநிலையில்  தமிழிசை துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, நேற்று ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து அளிக்கப்பட்டது. அப்போது  ஓராண்டு காலத்தில் பணியாற்றியது தொடர்பான புத்தகம், வீடியோ வெளியிடப்பட்டன.  

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ரங்கசாமி, காலையில் புதுச்சேரி,  மாலையில் தெலுங்கானா, மறுநாள் டெல்லி என பறந்து பறந்து தமிழிசை பணியாற்றுவதாக பெருமிதம் தெரிவித்தார்.  புதுச்சேரி வளர்ச்சியில் அக்கறை காட்டுவதாக குறிப்பிட்ட அவர், இதுவரை எந்த கோப்பினையும் தாமதப்படுத்தியதில்லை என்றும், தீபாவளி, பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் வெள்ள நிவாரணம் வழங்க காரணமாக இருந்தவர் ஆளுநர் தான் என கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய  துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், புதுச்சேரி மக்கள் நன்றாக இருக்கவேண்டும் என்ற மனநிலையில்தான் பணியாற்றுவதாக குறிப்பிட்டார். பாரதிக்கு வானுயர சிலையை புதுச்சேரியில் அமைக்கவேண்டும் என்பதே தனது ஆசை எனவும் அப்போது தெரிவித்தார்.