மோசமான நிலையிலேயே நீடிக்கும் காற்று மாசு... டெல்லியில் கட்டுமான பணிகளுக்கான தடை தொடரும்...

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் லாரிகள் தவிர்த்து, டெல்லிக்குள் பிற லாரிகள் நுழைவதற்கான தடை டிசம்பர் 7-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மோசமான நிலையிலேயே நீடிக்கும் காற்று மாசு... டெல்லியில் கட்டுமான பணிகளுக்கான தடை தொடரும்...

தலைநகர் டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முதலில் நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம் மற்றும் இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில், டெல்லி நகருக்குள் நவம்பர் 26-ம் தேதி வரை லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே இருப்பதால், கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கான தடையானது, மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து நீடிக்கும் என, டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் அறிவித்துள்ளார்.

அதேசமயம், பிளம்பிங் வேலை, உட்புற அலங்காரம், மின்சார வேலை, தச்சு வேலை போன்ற மாசுபடுத்தாத கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ள அவர், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்தப்படும் லாரிகள் தவிர்த்து பிற லாரிகள் நுழைவதற்கான தடை டிசம்பர் 7-ம் தேதி வரை தொடரும் என்றும், அதே நேரத்தில் இயற்கை எரிவாயுவால் இயக்கப்படும் சி. என்.ஜி. லாரிகள் மற்றும் மின்சார வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய அனுமதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.