ஷின்சோ அபே மறைவிற்கு தேசிய அளவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு - பிரதமர் மோடி!

ஷின்சோ அபே மறைவிற்கு தேசிய அளவில் நாளை ஒரு நாள் துக்கம் அனுசரிப்பு - பிரதமர் மோடி!

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த முன்னாள் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாளை ஒரு நாள் துக்க தினம் அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழப்பு:

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றார். அப்போது, கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அபேவை துப்பாக்கியால் சுட்டார். மார்பு பகுதியில் குண்டுகள் பாய்ந்த நிலையில், ஷின்சொ ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். உடனே அவரை மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டு, ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏன் பதவி விலகினார் ஷின்சோ அபே:

ஜப்பானில் அதிக காலம் பிரதமராக இருந்த ஷின்சோ அபே, உடல்நலக் குறைவு காரணங்களுக்காக கடந்த 2020ஆம் ஆண்டு பதவி விலகினார். அவர் மீதான துப்பாக்கிச் சூடு தாக்குதல் உலக அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பி உள்ளது. பல நாட்டு அரசியல் தலைவர்கள், துப்பாக்கிச் சூட்டிற்கு கண்டனமும் வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி இரங்கல்:

இந்த நிலையில், பிரதமர் மோடி, தமது அன்பு நண்பர் ஷின்சோ அபே மீதான தாக்குதல் தமக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியா ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த அரும்பாடுபட்ட நண்பனை இந்தியா இழந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

நாளை ஒரு நாள் தேசிய அளவில் பொது துக்க நாளாக அனுசரிப்பு:

இதையடுத்து, ஷின்சோ அபேவின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், நாளை ஒருநாள் தேசிய அளவில் பொது துக்க நாளாக அனுசரிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.