”மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம்” குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி!

”மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம்” குறித்து உரையாற்றிய பிரதமர் மோடி!

குஜராத்தில் ’டிஜிட்டல் இந்தியா வாரம் 2022” என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம் ஊழல்வாதிகளிடமிருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளதாக உரையாற்றியுள்ளார்.

’டிஜிட்டல் இந்தியா வாரம் 2022” நிகழ்ச்சியை திறந்து வைத்த பிரதமர் மோடி:

குஜராத்தின் காந்திநகரில் நடைபெற்ற ’டிஜிட்டல் இந்தியா வாரம் 2022” என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் ”டிஜிட்டல் இந்தியா திட்டம்” குறித்து பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

”டிஜிட்டல் இந்தியா திட்டம்” குறித்து பிரதமர் மோடி பேசியது:

மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில் மத்திய அரசின் “டிஜிட்டல் இந்தியா திட்டம்”முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த திட்டம் மூலம் மக்களின் நேரம் என்பது மிக குறைவாகவே செலவிடப்படுகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் நமக்கு தேவையான பிறப்புச் சான்றிதழ், கட்டணம் செலுத்துதல், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை, தேர்வு முடிவுகள், வங்கி சேவை, வருமான வரி உள்ளிட்ட சான்றிதழ்கள் என எல்லாவற்றிற்கும் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. ஆனால், தற்பொழுது டிஜிட்டல் வசதியை பெற்ற பிறகு மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டிய நிலைமை மாறியுள்ளது. மேலும் டிஜிட்டல் வசதி மக்கள் காத்திருப்பையும்,  நேரம் வீணாகுவதையும் வெகுவாக குறைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த திட்டம் ஊழல் வாதிகளிடமிருந்து ஏழைகளை காப்பாற்றியது மட்டுமின்றி இடைத்தரகர்களையும் ஒழித்துள்ளதாக கூறியுள்ளார். 

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதே புரட்சி:

தொடர்ந்து பேசிய பிரதமர், தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்துவதே புரட்சி என்றும், தொழில்நுட்பத்தை பெரிய அளவில் பயன்படுத்த பழகிக்கொள்ளவில்லை என்றால் காலம் நமக்காக காத்திருக்காது என்று கூறிய அவர், தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் குஜராத் மாநிலம் முன்னோடியாக திகழ்கிறது என்றார். மேலும் இந்த டிஜிட்டல் இந்தியா திட்டம் 21 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு வாழ்வை எளிதாக மாற்றியுள்ளது. அந்த வகையில் கிராமங்களில் இருப்பவர்கள் கூட மிக எளிதில் டிஜிட்டல் மூலம் தனக்கு தேவையானவற்றை பெற்றுவிடுகின்றனர். அந்த அளவிற்கு டிஜிட்டல் சேவை மக்களின் வாழ்க்கையில் மிக முக்கிய பங்காற்றி வருகிறது.

டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை குறித்து முன்னாள் நிதியமைச்சர் கூறியதை சுட்டிக்காட்டிய பிரதமர்:

டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் டிஜிட்டல் பணம் பரிமாற்ற முறை கொண்டு வரப்பட்டபோது முன்னாள் நிதியமைச்சர்  இங்கு போதிய செல்போன்களே இல்லை அப்புறம் எப்படி 
இந்தத் திட்டம்  இங்கு சாத்தியமாகும் என்று கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டிய மோடி, கடந்த மே மாதத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 1.2 லட்சம் டிஜிட்டல் பணப்பரி மாற்றம் நடந்துள்ளது என்றார். அத்துடன் கடந்த 8 ஆண்டுகளில் 23 லட்சம் கோடி ரூபாய் நிதி ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அதேசமயம் இந்த ஆன்லைன் பணம் பரிவர்த்தனை மூலம் 2.25 லட்சம் கோடி ரூபாய் வரை தவறானவர்களின் கைகளில் கிடைப்பதை தடுத்திருக்கிறது. 

ஆன்லைன் மூலம் உடனே கிடைக்கும் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் :

ஒருவர் கொரோனா தடுப்பூசி செலுத்திய உடனே அவரது செல்போனுக்கு ஆன்லைன் மூலம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வந்து சேர்ந்துவிடுகிறது. இந்த வசதி டிஜிட்டல் புரட்சியால் மட்டுமே வந்தது என்று பிரதமர் மோடி பெருமையுடன் கூடியுள்ளார்.