வாரணாசியில் தேசிய கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி உரை!

வாரணாசியில் தேசிய கல்விக்கொள்கை குறித்து பிரதமர் மோடி உரை!

உத்தரப்பிரதேசத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்ற பிரதமர் மோடி, அகில பாரதீய கல்வி குறித்தான விழாவை துவங்கி வைத்துவிட்டு, புதிய தேசிய கல்விக்கொள்கையால் இளைஞர்கள் பட்டம் பெறாமலேயே, நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைக்க முடியும் என்று உரையாற்றியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மக்களவை தொகுதியான வாரணாசிக்கு இன்று 7-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்வதாகவும், அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதாகவும் அறிவித்திருந்தனர். இந்நிலையில்  இன்று உத்திரப்பிரதேசத்தின் வாரணாசியில்  பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி அங்கு சென்றார். அதன்படி அங்கு நடைபெற்ற தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அகில பாரதீய கல்வி குறித்தான விழாவை அவர் தொடங்கி வைத்தார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தேசிய கல்விக்கொள்கை குறித்து உரையாற்றினார்.  புதிய கல்விக்கொள்கை நாட்டின் கல்வித்துறையில் ஒரு மறுசீரமைப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தார். 

அதுமட்டுமல்லாமல், சமஸ்கிருதம் போன்ற இந்திய பண்டைய மொழிகளுக்கு தேசிய கல்விக்கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும், இதனால் இளைஞர்கள் பட்டம் பெறாமலேயே நாட்டின் முன்னேற்றத்துக்காக சேவை புரிய முடியும் எனவும் குறிப்பிட்டார். மேலும் 21ம் நூற்றாண்டின் நவீன சிந்தனைகளுடன் மாணவர்களை இணைப்பதே தேசிய கல்விக்கொள்கையின் இலக்கு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.