ஜி 20 மாநாடு தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை ஆலோசனை..!

ஜி 20 மாநாடு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

ஜி 20 மாநாடு தொடர்பாக டெல்லியில் பிரதமர்  மோடி  தலைமையில்  நாளை ஆலோசனை..!
அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிக்கோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன், ஐரேப்பியன் யூனியன் ஆகிய 20 நாடுகள் சேர்ந்ததுதான் ஜி 20 எனும் அமைப்பாகும்.
 
உலக பொருளாதாரத்தில் முதன்மைச் சிக்கல்களை கலந்து பேசி வளர்ச்சி அடைந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரங்களை ஒன்றிணைக்கும் முயற்சியே இதன் நோக்கம் ஆகும்.
 
அந்த வகையில் கடந்த ஆண்டு 2021 இல் ஜி20 உச்சி மாநாடுக்கான தலைமை பொறுப்பை இந்தோனேஷியா ஏற்றது. ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ஜி 20 தலைமை பொறுப்பானது கடந்த ஒன்றாம் தேதி இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த ஆண்டு உச்சி மாநாட்டை இந்தியா நடத்துகிறது.
 
ஜி 20 உச்சி மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்காக டெல்லியில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்பேன் என முதல் நபராக அறிவித்துள்ளார்.
 
 இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார். அங்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நாளை இரவே அவர் சென்னை திரும்புகிறார். இந்த டெல்லி ஆலோசனை கூட்டத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர் மோடி அனைத்து கட்சித் தலைவர்களையும் வரவேற்க உள்ளார்.
 
அந்த வகையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி தரப்பினர்  உற்சாகம் அடைந்துள்ளனர்.