இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்... அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம்!!

பட்ஜெட் மூலம் அதிக வளர்ச்சி, அதிக முதலீடு, அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்... அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம்!!

பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி-மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ந்து 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், “மிகவும் சிறப்பான பட்ஜெட்டை நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான பட்ஜெட். உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தி, பொருளாதார வளர்ச்சியை இந்த பட்ஜெட் ஊக்குவிக்கும். சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் பல தரப்பில் இருந்து வரவேற்பை பெற்றது. விவசாயிகள், ஏழைகள் மத்திய பட்ஜெட்டால் பயன்பெறுவர். உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கங்கை நதிக்கரையில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு சிறப்பானது. விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதார விலை இந்த பட்ஜெட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

நாட்டிலேயே முதன்முறையாக, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு-காஷ்மீர், வடகிழக்கு போன்ற பகுதிகளுக்கு 'பர்வத் மாலா' திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மலைகளில் நவீன போக்குவரத்து மற்றும் இணைப்பு முறையை எளிதாக்கும். இது எல்லையோர கிராமங்களுக்கு வலு சேர்க்கும்” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.