பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் :  2024 வரை நீட்டித்தது மத்திய அரசு !!

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை 2024ம் ஆண்டு டிசம்பர் வரை நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் :  2024 வரை நீட்டித்தது மத்திய அரசு !!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தை வரும் 2024ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. 

மத்திய நகர்ப்புற வீட்டு வசதித்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த மார்ச் மாதம் வரை அனுமதி அளிக்கப்பட்ட 122 புள்ளி 69 லட்சம் வீடுகளின் கட்டுமானப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

கடந்த மார்ச் 31 ம் தேதி வரை சுமார் 1 லட்சத்து 18 ஆயிரத்து 20 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதி உதவி மற்றும் மானியமாக இதுவரை விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 2024ம் ஆண்டு டிசம்பர் வரை 85 ஆயிரத்து 406 கோடி ரூபாய் மத்திய அரசின் நிதி உதவி மற்றும் மானியமாக விடுவிக்கப்பட உள்ளது. 

ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட வீடுகளை கட்டி முடிக்க கால அவகாசம் வழங்குமாறு பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்ததை அடுத்து இந்த திட்டத்தை நீட்டிப்பதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.