காவல்துறைக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் : பெயர் பட்டியலை வழங்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை!

சுதந்திர தினத்தன்று வழங்கப்படும், குடியரசுத் தலைவரின் காவல்துறைக்கான பதக்கத்திற்கு, பெயர்களை பரிந்துரைக்கும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள், ரயில்வே காவல் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு, ஜனாதிபதி பதக்கம் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், நடப்பாண்டு சுதந்திர தினத்தன்று இந்த விருதினை பெறத் தகுதியுடையவர்களின், பெயர் பட்டியலை வழங்கும்படி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் காவல் படைகள் மற்றும் மத்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
மேலும், இதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து மே 15ஆம் தேதிக்குள் பெயர் பட்டியலை அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.