ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள மசூதியை இடிக்க வேண்டும் :  சர்ச்சை வீடியோவை பதிவிட்ட சாமியார் கைது!!

பாபர் மசூதியை தொடர்ந்து ஸ்ரீரங்கப்பட்டினம் நகரில் உள்ள மசூதியை இடித்து ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வீடியோ பதிவு செய்த சாமியார் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள மசூதியை இடிக்க வேண்டும் :  சர்ச்சை வீடியோவை பதிவிட்ட சாமியார் கைது!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா நகரில் உள்ள பழைமையான மசூதி ஒன்றின் முன்பு சாமியார் ஒருவர் நின்று கொண்டு கோயிலை இடித்து இந்த மசூதியை கட்டியுள்ளனர், இந்து சங்கங்கள் ஒன்று சேர்ந்து விரைவில் இந்த மசூதியை இடித்து இங்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டும் என்று சர்ச்சைக்குரிய வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த வீடியோ குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மண்டியா காவல்துறை இந்த வீடியோவில் இருப்பது சிக்கமங்களூரு மாவட்டத்தில் உள்ள காலி மடத்தின் தலைவராக இருக்கும் ரிஷி குமார் என்பது தெரியவந்தது. உடனடியாக ரிசி குமார் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் செவ்வாய் கிழமை காலை அவரை கைது செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி கொரோனா பரிசோதனை செய்த பிறகு சிறையில் அடைத்தனர். 

காவல்துறையினர், ரிஷிகுமாரிடம் விசாரணை நடத்திய போது கடந்த இரண்டு நாட்களுக்கு ஒரு குழந்தை இறந்ததை அடுத்து திதி கொடுப்பதற்காக மண்டியா வந்துள்ளார். அப்பொழுது குறிப்பிட்ட மசூதியை கடந்து செல்லும்போது தனது ஞான திருஷ்டியில் கோவில் இடிக்கப்பட்டு மசூதி கட்டப்பட்டுள்ளதை தான் உணர்ந்த காரணத்தினால் இந்த வீடியோ பதிவை வெளியிட்டதாகவும் இதற்காக வருத்தம் தெரிவிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

சாமியார் சிறைக்குச் செல்லும் முன்பு பத்திரிக்கையாளர்களிடம் தான் உயிரோடு இருக்கும் வரை இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்வேன். இந்து சங்கங்கள் ஒன்று கூடுங்கள். கண்டிப்பாக இந்த மசூதியை இடித்துவிட்டு நாம் இங்கு ஆஞ்சநேயர் கோயில் கட்டுவோம் என்று தெரிவித்துள்ளார்.  இந்த மசூதி இருப்பது அனைத்தும் பழமையான தூண்கள் கொண்டுள்ளது. இது அனைத்தும் அருமையான கோவிலுக்கு சொந்தமானது. ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள கோவிலை மசூதியாக மாற்றியுள்ளனர். இந்து சங்கங்கள் ஒன்று கூடி விரைவில் இடிக்க வேண்டிய மசூதி இது என்று தெரிவித்தார்.