காங்கிரஸ் கட்சியில் சேர விடுத்த அழைப்பை பிரசாந்த் கிஷோர் ஏற்க மறுப்பு - ரந்தீப் சுர்ஜேவாலா தகவல்

காங்கிரஸ் கட்சியில் இணைய விடுத்த அழைப்பை பிரசாந்த் கிஷோர் ஏற்க மறுத்துள்ளதாக அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் சேர விடுத்த அழைப்பை பிரசாந்த் கிஷோர் ஏற்க மறுப்பு  -  ரந்தீப் சுர்ஜேவாலா தகவல்

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் கடந்த சில தினங்களுக்கு முன் அடுத்தடுத்து இரண்டு முறை காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்தார்.

அப்போது 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள அவர் ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்பட்டது. இந்த ஆலோசனைகளின் அடிப்படையில் கட்சியில் சிறப்பு  நடவடிக்கை குழுவை அமைக்க சோனியாகாந்தி முடிவு செய்தார்.

மேலும் மே13  முதல் 15ம் தேதி வரை  நவ்சங்கல்ப் சிந்தன் ஷிபிர்’ என்ற பெயரில் ராஜஸ்தானில் அக்கட்சியின் சிறப்பு கூட்டத்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியில் சேர விடுத்த அழைப்பை பிரசாந்த் கிஷோர் நிராகரித்து விட்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். மேலும்  மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கு அவர் வழங்கிய பரிந்துரைகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுர்ஜேவாலாவின் டிவிட்டுக்கு பதிலளிக்கும் விதமாக பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,  தான் காங்கிரசில் இணைவதை விட சிறந்த தலைமையே அக்கட்சிக்கு தேவை எனத் தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் அடிமட்டம் வரை ஊடுருவியுள்ள கட்டமைப்பு குளறுபடிகளை, உடனடியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.