மகாராஷ்டிராவில் தொடரும் அரசியல் குழப்பம்.. ஆதரவு எம்எல்ஏக்களுடன் மும்பை திரும்புகிறார் ஏக்நாத் ஷிண்டே!!

பரபரப்பான அரசியல் சூழலில், சிவசேனா அதிருப்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் எம்எல்ஏக்கள்  மும்பை திரும்புகின்றனர்.

மகாராஷ்டிராவில் தொடரும் அரசியல் குழப்பம்.. ஆதரவு எம்எல்ஏக்களுடன் மும்பை திரும்புகிறார் ஏக்நாத் ஷிண்டே!!

சிவசேனா கட்சியின் மூத்த நிர்வாகியான ஏக்நாத் ஷிண்டே, கட்சித் தலைமை மீது கொண்ட அதிருப்தியால், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலம் சூரத் சென்று, அங்கிருந்து கவுஹாத்தியில் முகாமிட்டார். ஷிண்டேவுக்கு நாளுக்கு நாள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், ஆளும் சிவசேனா கூட்டணி அரசு கவிழும் நிலைக்கு தள்ளப்பட்டது.

இந்த சூழலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு, 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை, ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என துணை சபாநாயகர் மூலம் நோட்டீஸ் அனுப்ப, இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை ஷிண்டே நாடினார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்க நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்தது.

இந்த சூழலில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் இணைந்து பாஜக ஆட்சி அமைக்க முயற்சி செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பாஜக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி விரைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், தன்னுடன் 50 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மேலும் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கவுஹாத்தியிலிருந்து மும்பை திரும்பும் ஷிண்டே, மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே  ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, விரைவில் உத்தவ் தாக்கரேவை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்க கோரலாம் எனக் கூறப்படுவதால், அங்கு உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. இந்த சூழலில், உத்தவ் தாக்கரே தலைமையிலான அமைச்சரவை கூட்டம் மாலை 5 மணிக்கு  நடைபெறும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.