திட்டமிடப்பட்டு தொடரும் ரெய்டுகள்....!!!!!தாக்கு பிடிக்குமா ஆம் ஆத்மி!!!

திட்டமிடப்பட்டு தொடரும் ரெய்டுகள்....!!!!!தாக்கு பிடிக்குமா ஆம் ஆத்மி!!!
Published on
Updated on
2 min read

டெல்லியில் ஆம் ஆத்மீ அரசுக்கு மீண்டும் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.  2020ம் ஆண்டில் குளிரூட்டப்பட்ட 1000 சொகுசு பேருந்துகளை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்ற புகாரை சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பேருந்து முறைகேடு:

ஆம் ஆத்மி அரசு டெல்லியில் 2020ம் ஆண்டில் ஆயிரம் குளிர்சாதன அரசு பேருந்துகளை வாங்கியது எனவும் மேலும் அதற்கான பராமரிப்பு ஒப்பந்தங்களையும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளை முழுமையாக ஆராய்வதற்கு டெல்லி துணை நிலை ஆளுநர், மாநில லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் அதிகாரி ஓ.பி.அகர்வால் தலைமையில், முதன்மைச் செயலர் (விஜிலென்ஸ்) கே.ஆர்.மீனா, போக்குவரத்து ஆணையர் ஆஷிஷ் குந்த்ரா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்திருந்தார்.

விசாரணை குழு:

மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்து குற்றச்சாட்டின் உண்மை தன்மையை ஆராய அறிவுறுத்தி இருந்தார்.  இதற்கான அறிக்கை சமீபத்தில் துணைநிலை ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அந்த அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கையை ஆராய்ந்த பிறகு 1000 அரசு சொகுசு பேருந்துகளை வாங்கியதிலும் பராமரிப்பு பணிகளுக்கு ஒப்பந்தம் ஒதுக்கியதிலும் முறைகேடு நடந்துள்ளதா என சிபிஐ விசாரிக்க பரிந்துரை செய்தது. இதற்கான கடிதத்தையும் ஏற்கனவே டெல்லி அரசின் தலைமைச் செயலாளர் விஜய் குமார் தேவ்-க்கும் அனுப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

விசாரணை அறிக்கை:

கடந்த ஜூலை 11ம் தேதி துணைநிலை ஆளுநரால் உருவாக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட குழு ஆயிரம் அரச பேருந்துகளை வாங்கியதில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெறவில்லை எனவும் அதே நேரத்தில் அதன் உண்மை தன்மையை மிக உறுதியாக உறுதிப்படுத்த முடியவில்லை எனவும் தெரிவித்து இருந்தது.  

சிபிஐ விசாரணை:

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக டெல்லி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் தெரிவிக்கையில் 1000 அரசு பேருந்துகளை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதா என்பதை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது திருப்தி அளிக்கும் வகையில் உள்ளதாகவும் கூடிய விரைவில் ஆம் ஆத்மி கட்சியின் முறைகேடுகள் வெளி கொண்டுவரப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

திட்டமிடப்பட்ட சதி:

அதே நேரத்தில் ஆம் ஆத்மி அரசுக்கு எதிராக மத்திய அரசின் சதி என்பது வெளிப்படையாக தெரிந்து கொள்ள முடிவதாகவும் டெல்லி மக்களுக்கு புதிய பேருந்துகள் கிடைக்கக் கூடாது என்பதில் பாஜகவின் உறுதித்தன்மை வெளிப்படையாக தெரிவதாகவும் ஆம் ஆத்மியை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்துள்ளனர். அதே நேரத்தில் 1000 அரசு பேருந்துகளை வாங்கியதில் எவ்வித முறைகேடும் இல்லை என ஏற்கனவே அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலும் மீண்டும் சிபிஐ விசாரணை என்பது ஆம் ஆத்மியின் செயல்பாடுகளை முடக்கக்கூடிய வகையிலான அச்சுறுத்தல் எனவும் ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

புதிய கலால் வரிக் கொள்கையில் முறைகேடு நடந்துள்ளதாக ஏற்கனவே சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு மேலும் ஒரு அழுத்தமாக அரசு பேருந்துகளை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது என்பதை சிபிஐ விசாரிக்க உள்ளது இந்நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com