பெட்ரோல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளி!!

பெட்ரோல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக மாநிலங்களவையில் எதிர்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுட்டனர்.

பெட்ரோல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு.. மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளி!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் 5வது நாளான இன்று, அவை கூடியதும் அவை தலைவர் வெங்கையா நாயுடு சீனாவில் நேற்று விமானம் விபத்துக்குள்ளானது பற்றி எடுத்துரைத்தார்.

அதனைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களுக்கு அவை சார்பில் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் துக்க நேரத்தில் சீனாவுடன் இந்தியா உறுதுணையாக இருக்கும் என வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

அதனைத்தொடர்ந்து அன்றைய தினம் விவாதிக்கப்பட விவாதங்கள் சார்ந்த அறிக்கைகள் அவையில் சமர்பிக்கப்பட்டது. அப்போது பெட்ரோல், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து விவாதிக்கவும், அதுசார்ந்த அறிக்கைகளை சமர்பிக்கவும் அனுமதிக்காததால், அவை நடுவில் திரண்ட எதிர்கட்சி எம். பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவை மதியம்  வரை ஒத்திவைக்கப்பட்டது. 

இதனிடையே, அவையிலிருந்து வெளியேறிய மாநிலங்களவை எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி மோடி அரசு ஏழைகளை சுரண்டுவதாக குற்றஞ்சாட்டினார். ரஷ்யா- உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், 1 சதவீதத்திற்கும் குறைவாகவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக பெட்ரோலிய அமைச்சர் தெரிவித்துள்ளதாகவும், இதனால் தற்போதைய விலை ஏற்றத்திற்கான காரணம் என்ன என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.