ஸ்தம்பிக்கும் வட மாநிலங்கள்.. மக்களின் இயல்பு வாழ்கை முடக்கம்!

மராட்டியம், கர்நாடகா, தெலங்கானா உள்ளி்ட்ட பல மாநிலங்களில் தொடரும் கனமழையால் லட்சக்கணக்கான மக்களின்  இயல்பு  வாழ்க்கை முடங்கியுள்ளது.

ஸ்தம்பிக்கும் வட மாநிலங்கள்.. மக்களின் இயல்பு வாழ்கை முடக்கம்!

மராட்டிய மாநிலத்தில் பருவமழையை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.  இதனால் பல மாவட்டங்களில் நிலச்சரிவு மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


மராட்டிய மாநிலத்தின் கடலோர மாவட்டமான ராய்காட்டில் மகாத் தெஹ்சில் மற்றும் அதனை சுற்றி நிலச்சரிவு ஏற்பட்டதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50  ஆக உயர்ந்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு படையினர்  இரவு, பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டு உடல்களை கண்டெடுத்து  வருகின்றனர். பலத்த மழை காரணமாக  மும்பை புனே உள்ளிட்ட முக்கிய நகரங்களில்  சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன. ரயில் நிலையங்கள், தண்டவாளங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்திருப்பதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அதேபோல் கர்நாடகா  தெலங்கானா பீஹார், அசாம், மேற்கு வங்கம்,  உள்ளிட்ட பல மாநிலங்களில், ஒரு வாரமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு  ஏற்பட்டு தாழ்வான  பகுதிகளில்  உள்ளிட்ட குடியிருப்புகள் தண்ணீரில்  மூழ்கியுள்ளன. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில்  வட மாநிலங்களுக்கு செல்லும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கர்நாடகா, கேரளா, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து, வடமாநிலங்களுக்கு செல்லும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் நேரம் மற்றும் வழித்தட மாற்றம் செய்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.