காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக மௌனம் சாதிக்கிறது..! சுட்டிகாட்டி குற்றம்சாட்டிய பிரதமர் மோடி..!

பயங்கரவாதத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்க மறுப்பதாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
குஜராத் தேர்தல்:
குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டத் தேர்தல் டிசம்பர் 1 ஆம் தேதியும், இரண்டாவது கட்டத் தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. குஜராத்தில் ஆட்சியை பிடிக்க மும்முனை போட்டி நிலவுவதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
பிரதமர் உரை:
குஜராத் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி குஜராத்தில் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக,குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி உரையாற்றினார்.
இதையும் படிக்க: உலகின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பிய எழுத்தாளர் அருந்ததி ராய்..!
இதற்கு குரல் கொடுப்பதில்லை:
அப்போது பேசிய அவர், குஜராத்தின் தற்போதைய தலைமுறையினர், அகமதாபாத் மற்றும் சூரத் குண்டு வெடிப்புகளைப் பார்த்ததில்லை என்று குறிப்பிட்டு, காங்கிரஸ் கட்சி பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை என்று குற்றஞ்சாட்டினார். தங்கள் வாக்குவங்கி பாதிக்கப்படும் எனக்கருதி காங்கிரஸ் கட்சி மௌனம் சாதிப்பதாக பேசிய அவர், பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கைகளை காங்கிரஸ் கேள்வி கேட்பதாகவும் சாடினார்.
சூரத் விமான நிலையம்:
மேலும், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது பாஜக வைத்த கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் அரசு செவி சாய்க்கவில்லை என்று தெரிவித்த அவர், தற்போதைய இரட்டை எஞ்சின் அரசால் சூரத்தில் விமான நிலையம் அமைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி பிரசாரம் மேற்கொண்டார்.