வடமாநிலங்களில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். 

வடமாநிலங்களில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா!

நாட்டில் கொரோனா தாக்கம் மெல்ல குறைந்து வந்தாலும், கொரோனா 2-ம் அலை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை என்றும், சில மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு இன்னும் அதிகமாகவே உள்ளதாகவும் ஆய்வாளர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவல் தொடர்பாக வடகிழக்கு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். காணொலி வாயிலாக இன்று காலை 11 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அசாம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், மணிப்பூர், மேகாலயா, அருணாச்சல பிரதேசம் மற்றும் மிசோரம் ஆகிய எட்டு மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். நாட்டில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில், மீண்டும் தொற்று பாதிப்பு 10 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ள நிலையில், மணிப்பூர், அசாம் மாநிலங்களின் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இன்னும் அதிகமாகவே உள்ளது.

இந்த நிலையில், வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கொரோனா நிலை குறித்து, மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா கடந்த வாரம் ஆய்வு செய்திருந்தார். மேலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள அருணாச்சல பிரதேசம், திரிபுரா, மணிப்பூர் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு சிறப்புக் குழுக்களையும் அனுப்பியுள்ள நிலையில், பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள உள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.