கொரோனா போராட்டத்திலும் பல மைல்கல் சாதனை... மன் கி பாத் நிகழ்ச்சியில்  பிரதமர் உரை...

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு உற்சாகமான வார்த்தைகளை கூறி, ஊக்கமளிக்கும்படி முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கிடம் கேட்டுக்கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

கொரோனா போராட்டத்திலும் பல மைல்கல் சாதனை... மன் கி பாத் நிகழ்ச்சியில்  பிரதமர் உரை...
ஜூன் மாத கடைசி ஞாயிற்று கிழமையான இன்று, மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்பால் கடந்த 18ம் தேதி உயிரிழந்த முன்னாள் தடகள வீரர் மில்கா சிங்கை நினைவு கூர்ந்து பேசினார். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மில்கா சிங்கிடம் ஒலிம்பிக் செல்லும் வீரர்களுக்கு உற்சாகமூட்டும் வார்த்தைகளை கூறும்படி தான் கேட்டுக்கொண்டதாக பிரதமர் கூறினார். 
 
தொடர்ந்து ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களின் அயராத பயற்சி குறித்து மோடி பேசினார். அப்போது மகராஷ்டிராவை சேர்ந்த விளையாட்டு வீரர் பிரவின் ஜாதவை நினைவு கூர்ந்த அவர், பிரவீன் சிறந்த வில்வித்தை என்றும், அவரது பெற்றோர் சாதாரண கூலித்தொழிலாளி என்றபோதும், அவரது தொடர் முயற்சி  மூலம் அவர் டோக்கியாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் முதல்முறையாக பங்கேற்பதாகவும் தெரிவித்தார். 
 
இதேபோல் எளிமையான குடும்ப சூழலிலும், அயராது போராடி ஹாக்கி பெண்கள் அணியில் இடம்பெற்றுள்ள நேகா கோயல் பற்றியும், அவரது குடும்பத்தினரையும் பற்றி பிரதமர் உரையாற்றினார். மேலும் ஒலிம்பிக்கில், பெண்கள் பிரிவில் பங்கேற்கவுள்ள வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி பற்றியும் அவர் பேசினார். வாழ்க்கையில் கடினமான சூழலை எதிர்கொண்ட அவர், போராடி ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றதாகவும் தெரிவித்தார். 
 
தொடர்ந்து கொரோனா பற்றி பேசிய மோடி, அதனுடனான போராட்டம் தொடர்வதாகவும், ஆனால் அதன்மூலம் பல மைல்கல் சாதனைகளை நிகழ்த்தியிருப்பதாகவும் தெரிவித்தார். எனவே கொரோனா பற்றிய அச்சம் மக்களிடம் வேண்டாம் என அறிவுறுத்திய அவர், தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.