பொய்களையே பேசுகிறார் பிரதமர் மோடி..! மக்கள் புத்திசாலிகள்..! கங்கிரஸ் தலைவர் சரமாரி பேச்சு

பிரதமர் மோடி பொய்களுக்கு மேல் பொய்களைக் கூறி வருவதாகவும், தன்னை ஏழை என்றுக் கூறிக்கொண்டு மக்களின் அனுதாபத்தை தேடுகிறார் எனவும் காங்கிரஸ் தலைவர் கடும் விமர்சனம்.
குஜராத் தேர்தல்:
குஜராத் சட்டப்பேரவைக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. முதல் கட்டத் தேர்தல் டிசம்பர் 1 ஆம் தேதியும், இரண்டாவது கட்டத் தேர்தல் டிசம்பர் 5 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. குஜராத்தில் ஆட்சியை பிடிக்க மும்முனை போட்டி நிலவுவதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
ஜனநாயகம் கிடைத்திருக்காது:
குஜராத் தேர்தலையொட்டி, பழங்குடியினர் அதிகம் வாழும் நர்மதை மாவட்டத்தின் டேடியாபாடா பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். 70 ஆண்டுகளில் நாட்டுக்காக காங்கிரஸ் என்ன செய்தது? என பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் கேள்வி எழுப்புகின்றனர். 70 ஆண்டுகளாக காங்கிரஸ் எதையும் செய்யாமல் இருந்திருந்தால் உங்களுக்கு ஜனநாயகம் கிடைத்திருக்காது எனக் கூறியுள்ளார்.
ஏழை தான்:
தன்னை ஏழையென எப்போதும் பிரதமர் மோடி கூறிக் கொள்கிறார். நானும் ஏழைதான்; ஏழையிலும் ஏழையான குடும்பத்தில் இருந்து வந்தவன். தீண்டத்தகாததாக ஒதுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவன் எனக் கூறியவர், ஏழையாக இருப்பதால் தனது அந்தஸ்தை குறிப்பிடு சிலர் தரக்குறைவாக பேசுவதாக பிரதமர் மோடி கூறுகிறார். பணக்காரர்களின் பக்கம் நிற்கும் அவர், மக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக இப்படிப்பட்ட விஷயங்களை கூறுகிறார். ஆனால் இப்போதுள்ள மக்கள் புத்திசாலிகள். அவர்களை முட்டாளாக்க முடியாது எனக் பேசியுள்ளார்.
பொய்யர்களின் தலைவர்:
மேலும் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி கூறும் பொய்களை மக்கள் கவனித்துக் கொண்டு தான் உள்ளனர். பொய்யர்களின் தலைவரான அவர், நாட்டை காங்கிரஸ் கொள்ளை அடித்ததாகக் கூறுகிறார். ஆனால், ஏழைகளின் நிலங்களை கொள்ளையடித்துக் கொண்டிருப்பது அவரது அரசு தான் என சாடியவர், பழங்குடியினருக்கு நிலம் வழங்காமல் இருப்பதும் அவர்கள் தான். பிரதமரும் அவரது ஆதரவு பெற்ற பணக்காரர்களும் நிலம், நீர், வனத்தை கொள்ளையடிக்கின்றனர் எனப் பேசியுள்ளார் கார்கே.
குஜராத்தில் தொடர்ந்து 6 சட்டப் பேரவை தேர்தல்களில் தோல்வியையே சந்தித்துள்ள காங்கிரஸ் ஏழாவது முறையாக வெற்றிப் பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியுள்ளது.