கொரோனா முடியவில்லை... பிரதமர் எச்சரிக்கை...

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக, 23 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கொரோனா முடியவில்லை... பிரதமர் எச்சரிக்கை...
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஐ.சி.யூ. படுக்கைகள் கொண்ட குழந்தைகள் பராமரிப்பு பிரிவுகள், ஆக்ஸிஜன் சேமிப்பு, ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துதல் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மொத்தம் 23 ஆயிரம் கோடியை சிறப்பு தொகுப்பாக அறிவித்தார்.
 
தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், முகக்கவசங்கள் கூட அணியாமல் மக்கள் வெளியில் செல்வதாகக் கூறிய பிரதமர், கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பதையும், பல நாடுகளில் தொற்று அதிகரித்து வருவதையும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என எச்சரித்தார்.
 
மேலும், இதுபோன்ற நேரத்தில், கவனக்குறைவு மற்றும் மனநிறைவுக்கு இடமில்லை என்றும் அவர் தெரிவித்தார். மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் தொடர்ந்து அதிககளவில் கொரோனா பாதிப்பு பதிவாகி வருவதை கவலை அளிப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், தொற்றை குறைக்க முடியும் என்றார்.
 
மேலும், கொரோனாவுக்கு எதிரான போரில், முன்களப் பணியாளர்கள் முழு வீரியத்துடன் போராடி வருவதாக பாராட்டு தெரிவித்த அவர், அதிகளவில் தடுப்பூசி செலுத்தப்படுவதோடு, பரிசோதனையும் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார்.