ராஜ்ய சபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்...  உத்தரவை திரும்ப பெற கோரி எதிர்கட்சிகள் கடும் அமளி...

ராஜ்ய சபா எம்.பி-கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்ப பெற முடியாது என மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

ராஜ்ய சபா எம்.பி.க்கள் 12 பேர் சஸ்பெண்ட்...  உத்தரவை திரும்ப பெற கோரி எதிர்கட்சிகள் கடும் அமளி...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாள் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டன. இதனால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முதல் நாளில் முடங்கின. இதையடுத்து அவை மாண்புக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக எதிர்கட்சி ராஜ்ய சபா எம்.பி-கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இரண்டாம் நாள் அமர்வு இன்று நடைபெற்ற நிலையில் 12 ராஜ்ய சபா எம்.பி-கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும் அதனை திரும்ப பெற கோரியும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்கட்சிகளின் கடும் அமளியால் இன்று கூட்டத்தை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அப்போது அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தும் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநிலங்களவை தலைவருக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும், 12 ராஜ்ய சபா எம்.பி-களின் சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற முடியாது எனவும் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு திட்டவட்டமாகக் கூறி விட்டார். அதேவேளையில் மக்களவையிலும் இந்தப் பிரச்சனையை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.