காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று தொடக்கம்..! காந்தி குடும்பத்தினர் போட்டியிட மறுப்பு..!

அக்டோபர் 17-ம் தேதி தேர்தல் நடைபெற்று 19-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது..!

காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்பு மனு இன்று தொடக்கம்..! காந்தி குடும்பத்தினர் போட்டியிட மறுப்பு..!

இடைக்கால தலைவர் சோனியா காந்தி:

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து, கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். 

வேட்பு மனு தாக்கல் தொடக்கம்:

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 17ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடங்கி வரும் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. வரும் 1ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அன்றைய தினமே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. 

காந்தி குடும்பத்தினர் போட்டியிட மறுப்பு:

வேட்புமனுவை வாபஸ் பெற வரும் 8ம் தேதி கடைசி நாளாகும். வரும் 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் பதவிக்கு  சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, ராகுல்காந்தி என காந்தி குடும்பத்தைச் சேர்ந்த யாரும் போட்டியிட மறுத்துவிட்டனர்.  

அசோக் கெலாட் போட்டி:

இதனையடுத்து, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தான் போட்டியிடப்போவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும், சசிதரூர், திக் விஜயசிங், மணீஷ் திவாரி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்ற எதிர்பார்ப்பு தொண்டர்களிடையே அதிகரித்துள்ளது.