"தமிழர்களிடம் வெறுப்போ பகைமையோ இல்லை"  டி.கே.சிவகுமார்!

"தமிழர்களிடம் வெறுப்போ பகைமையோ இல்லை"  டி.கே.சிவகுமார்!

மேகதாது அணையை கட்டுவோம் என கூறியதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தமிழர்களிடம் வெறுப்போ பகைமையோ இல்லை என கர்நாடக துணை முதலமைச்சர் டி. கே.சிவகுமார் பதிலளித்துள்ளார்.

கர்நாடக துணை முதலமைச்சராக டி. கே.சிவகுமார் பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு நீர் பாசனம், பெங்களூர் நகர வளர்ச்சி துறை உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நீர்பாசனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய டி கே சிவக்குமார் மேகதாது திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில் அமல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். 

இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே.வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்துள்ள டி. கே.சிவகுமார், இரு மாநிலங்களும் சகோதரத்தன்மையுடன் மேகதாது விவகாரத்தை அணுக வேண்டும் எனவும் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் எண்ணம் கிடையாது எனவும் குறிப்பிட்டார். 

இத்திட்டம் மூலம் கர்நாடகா குடிநீர் பெறுவதோடு மின்சார உற்பத்தியும் செய்ய முடியும் எனவும், அணையில் தேக்கி வைக்கப்படும் நீரால் தமிழ்நாடு விவசாயிகள் பயன்பெறுவர் எனவும் அவர் கூறினார். தனது டுவிட்டர் பக்கத்திலும் இதுகுறித்து விளக்கமளித்த அவர், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசிடம் முறையிடுவேன் எனவும் தமிழர்களுடன் பகைமையோ வெறுப்போ இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:சீமானின் டிவிட்டர் கணக்கு முடக்கம்...! முதலமைச்சர் கண்டனம்...!!