இந்திய பொருளாதாரம் பற்றி நிர்மலாவுக்கு ஒன்றும் தெரியாது - ராகுல் விளாசல்!

இந்திய பொருளாதாரம் பற்றி நிர்மலாவுக்கு ஒன்றும் தெரியாது - ராகுல் விளாசல்!

இந்திய பொருளாதாரம் குறித்து, நிர்மலா சீதாராமனுக்கு ஒரு புரிதலும் இல்லை என, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விளாசியுள்ளார். 

போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ்:

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத் உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சனையை முன்வைத்து நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி இன்று டெல்லியில் போராட்டத்தை தீவிரப்படுத்திய எம்.பிக்கள், 144 தடையை மீறி  பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்றதோடு, குடியரசு தலைவர் மாளிகை நோக்கி கருப்பு நிற உடையில் பேரணி நடத்த முயன்றனர்.

ராகுல் கைது:

விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக போராட்டத்தை கையில் எடுத்த காங்கிரஸ், இன்று 144 தடையை மீறி பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி நடத்தியதால் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம். பிக்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். 

நிர்மலா சீதாராமனை விளாசிய ராகுல்:

இதற்கு முன்னர் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, மோடி அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுவதாக குறிப்பிட்ட ராகுல் காந்தி, மக்கள் படும் துயரம் பற்றி மத்திய நிதி அமைச்சருக்கு எதுவும் தெரிவதில்லை என்றும், அவருக்கு இந்திய பொருளாதாரம் பற்றிய ஒரு புரிதலும் இல்லை எனவும் சாடினார். நிர்மலா சீதாராமன் வெறும் ஊதுகுழலாக மட்டுமே செயல்படுவதாகவும் ராகுல் கடுமையாக விளாசினார்.