புதிய சாதனை படைத்த இந்தியா... உலக சுகாதார அமைப்பு பாராட்டு...

இந்தியாவில் 75 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதற்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு தெரிவித்துள்ளது.

புதிய சாதனை படைத்த இந்தியா... உலக சுகாதார அமைப்பு பாராட்டு...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம், ஜனவரி 16-ம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில் தடுப்பூசி தொடர்பான அச்சம், தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் போன்ற காரணங்களால் குறைந்த அளவிலேயே தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தடுப்பூசி போடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாடு முழுவதும் செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை, 75 கோடி என்ற மைல் கல்லை கடந்துள்ளது. இந்த தகவலை தமது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இடைவிடாமல் புதிய பரிமாணங்களை உருவாக்கி வருவதாகவும், 75-வது சுதந்திர தின ஆண்டில், நாடு 75 கோடி டோஸ் தடுப்பூசியைக் கடந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேகத்தை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா அதிகரித்திருப்பதாக, உலக சுகாதார அமைப்பின் பிராந்திய இயக்குனர் பூனம் கேத்ரபால் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முதல் 10 கோடி தடுப்பூசிகளை செலுத்த இந்தியா 85 நாள்களை எடுத்துக் கொண்டதாகவும், தற்போத வெறும் 13 நாட்களில் 65 கோடியில் இருந்து 75 கோடி என்ற சாதனையை அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று நோயின் மூன்றாவது அலையைத் தடுக்க, இந்த ஆண்டு இறுதிக்குள் 60 சதவீத மக்களுக்கு தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.