உச்சநீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய தீர்மானங்கள்!!

உச்சநீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய தீர்மானங்கள்!!

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழக்கு விசாரணைகள் அடுத்த வாரம் முதல் "நேரலை"-யில் ஒளிபரப்பலாம் என உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. 

அரசியல் சாசன அமர்வு:

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த மாதம் 26ம் தேதி பதவி ஏற்று கொண்ட யு.யு லலித் உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார்.  அதன்படி வாரத்தின் மூன்று நாட்களில் (செவ்வாய்,புதன்,வியாழன்) 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முக்கியமான வழக்குகளை விசாரணை செய்து வருகிறது.

வழக்கு விசாரணை நேரம்:

இவை தவிர பிற நாட்களில் காலையில் புதிய வழக்குகளின் விசாரணையும், பிற்பகலில் ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணையும் உச்ச நீதிமன்றத்தால் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

வழக்கு நேரலை:

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அடங்கிய நீதிபதிகள் கூட்டம் நடைபெற்றுள்ளது.  அக்கூட்டத்தில் 2018ம் ஆண்டு எடுக்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் விசாரணை நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பலாம் என்ற முடிவு சாத்தியப்படுத்தும் வகையில் அடுத்த வாரம் முதல் அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்படும் வழக்குகளை மட்டும் நேரலையில் ஒளிபரப்பு செய்ய அனைத்து நீதிபதிகளும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.  

யூடியூப்:

முதற்கட்டமாக இந்த நேரலை "யூடியூப்" வாயிலாக செய்யலாம் எனவும் பிறகு உச்ச நீதிமன்றத்திற்கு என தனியான ஒரு போர்டல் வடிவமைக்கப்பட்டு அதன் வழியாக நேரலை செய்யலாம் எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பிற தீர்மானங்கள்:

இதேபோல் 2023ம் ஆண்டுக்கான உச்ச நீதிமன்றத்தின் காலண்டர் வடிவமைப்பும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும்,  உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதிகளின் பணியிடங்களை நிரப்புவதற்கும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஆலோசனை தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அடுத்தவாரம் முதல்:

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வுகளில் இப்போதைய சூழலில் பல்வேறு முக்கியமான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுவரும் சூழலிலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கு விசாரணையும் அடுத்த வாரம் முதல் நேரலையில் ஒளிபரப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: உலக அமைதி தூதுவன் பிரதமர் மோடி!!!