புதுச்சேரி : புதிய வாக்காளர்களை சேர்க்க புதிய செயலி...! விழிப்புணர்வு முகாம்...!

புதுச்சேரி : புதிய வாக்காளர்களை சேர்க்க புதிய செயலி...! விழிப்புணர்வு முகாம்...!

புதுச்சேரி மாநிலத்தில் புதிய வாக்காளர்களை சேர்க்க இந்திய தேர்தல் ஆணையம் புதிதாக வடிவமைக்கப்பட்ட செயலி மூலம் புதிய வாக்காளர்கள் பதிவு செய்யும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. 

வருகிற 2023 ஜனவரி, 1 ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு புதுச்சேரி மாநிலத்தில் வாக்காளர் திருத்தப்பணியை மாநில வாக்காளர் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. வாக்களிக்க தகுதியான அதாவது, 18 வயது பூர்த்தியான புதிய வாக்காளர்களை முழுமையாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதிய வாக்காளர்களை சேர்க்க, தேர்தல் ஆணையம் புதிய செயலியை உருவாக்கியுள்ளது.

இதை அறிமுகப்படுத்தும் வகையிலும், இளம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மாநில தேர்தல் ஆணையம் சிறப்பு முகாமை நடத்தியது. இதில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

அவர்களுக்கு இளம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தையும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் வலிமை ஆகியவை இளம் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உரிமை, அதை அவர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தேர்தல் துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட வாக்களர்களை சேர்க்கும் புதிய செயலி மூலம் ஏராளமானவர்கள் தங்களை புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டனர். மேலும் 2023, அக்டோபர் 31 அன்று வரை 18 வயது பூர்த்தியாகின்றவர்களுக்கும் இந்த செயலி மூலம் இப்போதே பதிவு செய்து கொண்டால் வயது பூர்த்தியாகும் காலத்தில் அவர்களை புதிய வாக்காளர்களாக சேர்க்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் செய்யும் என்பதையும் அதிகாரிகள் விளக்கினர்.

இதையும் படிக்க : மனைவிக்கு ஃபீஸ் கட்ட வந்த கணவருக்கு நேர்ந்த கொடுமை...!