ஆறு மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனை!!

நாடு முழுவதும் ஆறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

காலிஸ்தான் பிரிவினைவாதிகள், தீவிரவாத கும்பல்கள் மற்றும் கடத்தல் காரர்கள் தொடர்புடைய மூன்று வெவ்வேறு வழக்குகள் தொடர்பாக பஞ்சாப் , ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் 51 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

அதன்படி, பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள தக்துபுரா என்ற இடத்தில் மது ஒப்பந்ததாரர் வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல், பத்திண்டா மாவட்டத்திலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உள்ள ராஜியாசர் மற்றும் சூரத்கர் ஆகிய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. சூரத்கர் என்ற இடத்தில் மாணவர் அமைப்பு தலைவர் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதேபோல், உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூன் மாவட்டத்திலும் அதிரடி சோதனை நடைபெறுகிறது.

கனடாவில் உள்ள காலிஸ்தான் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 43 பேரின் தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்து இந்த சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.