மே.21ல் திட்டமிட்டபடி முதுகலை மருத்துவத்திற்கான நீட் தேர்வு நடைபெறும்! - உச்சநீதிமன்றம் தெரிவிப்பு!

முதுகலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வினை வருகிற 21ம் தேதி நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மே.21ல் திட்டமிட்டபடி முதுகலை மருத்துவத்திற்கான நீட் தேர்வு  நடைபெறும்!  - உச்சநீதிமன்றம் தெரிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக  2021-22 கல்வியாண்டுக்கான முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு தாமதமாக நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து கலந்தாய்வும் தாமதமாக தொடங்கி  தற்போது வரை நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் 2022-23 கல்வியாண்டில் முதுகலை மாணவர் சேர்க்கையை நடத்துவதற்கான நீட் நுழைவு தேர்வு வருகிற 21ம் தேதி நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இதற்கான முன்பதிவும் கடந்த 9ம் தேதியுடன் நிறைவடைந்தது. 

மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பால், குறைந்த ரேங்கில் கலந்தாய்வுக்கு காத்திருக்கும் மாணவர்கள், நீட் தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் மாணவர்களின் நலன் கருதி இத்தேர்வினை மாற்று தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், நீட் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற முடியாது என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் அடுத்த கல்வியாண்டை ஜனவரி மாதத்தில் தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், கொரோனா பேரிடர் காலமாக தொய்வு ஏற்பட்ட மாணவர் சேர்க்கையை முறைப்படுத்தி கொண்டு செல்ல உள்ளதாகவும் கூறியது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நீட் தேர்வை தாமதப்படுத்தினால் சேர்க்கை அட்டவணையில் தொய்வு ஏற்படும் என்றும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களின் தேவையை கருதி இந்த மனுக்களை ஏற்க முடியாது எனவும் கூறினர். 

எனவே திட்டமிட்டபடி வரும் 21ல் முதுகலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வினை நடத்தி முடிக்கும்படி உத்தரவிட்டு, நீட் தேர்வுக்கான தேதியை நீட்டிக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.