ஆசியாவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு....ஆப்கானிஸ்தான் குறித்து விவாதம்?!!

மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடனான சந்திப்பு இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை.  

ஆசியாவின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திப்பு....ஆப்கானிஸ்தான் குறித்து விவாதம்?!!

கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுடனான உயர் பாதுகாப்பு அதிகாரிகளின் மாநாட்டை இந்தியா இன்று முதல் முறையாக நடத்துகிறது.  இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானில் உருவாகி வரும் பாதுகாப்பற்ற நிலைமை மற்றும் அந்நாட்டில் இருந்து வெளிவரும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்படும் என்ற தகவலை அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதல் முறையாக..:

மத்திய ஆசிய நாடுகளின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளை இந்தியா முதல் முறையாக இந்தியாவில் சந்தித்து பேசவுள்ளது.  கடந்த ஆண்டு நவம்பரில், ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து இந்தியா ஒரு சந்திப்பை நடத்தியிருந்தது.  இதில் ரஷ்யா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் இதயம்:

மத்திய ஆசிய நாடுகளை ஆசியாவின் இதயமாக இந்தியா கருதுவதாக தெரிவித்துள்ளது. இந்த நாடுகள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினர்களாகவும் உள்ளன. “நாங்கள் ஒரு விரிவான முறையில் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி இந்த சந்திப்பு நடைபெறுகிறது.  ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிவரும் பயங்கரவாதம் மற்றும் பிராந்திய பாதுகாப்பில் அதன் தாக்கம் குறித்து இந்தியா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு பொதுவான கவலைகள் இருக்கிறது” என மத்திய ஆசிய நாடுகள் தெரிவித்துள்ளன.

எதைக் குறித்த சந்திப்பு:

இந்த மாநாட்டில் ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் அந்நாட்டின் வளர்ந்து வரும் பயங்கரவாதம் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் இந்தியாவும் மத்திய ஆசிய நாடுகளும் பொதுவான ஆர்வத்தைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளன.  மேலும் பல மத்திய ஆசிய நாடுகள் ஆப்கானிஸ்தானுடன் நில எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளன எனவும்  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காபூலில் தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து எல்லைப் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன எனவும் கூறியுள்ளன.

சபஹர் துறைமுகம்:

ஈரானில் உள்ள சபஹர் துறைமுகத்தை சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தின் ஒரு பகுதியாக மாற்றுவது  விவாதத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  எரிசக்தி வளம் கொண்ட ஈரானின் தெற்கு கடற்கரையில் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள சபஹார் துறைமுகம், இணைப்பு மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளால் உருவாக்கப்பட்டு வருகிறது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பிரதமர் மோடி குறித்த அவதூறு பேச்சு...கைது செய்யப்பட்ட செய்தி தொடர்பாளர்...நடந்தது என்ன?!!