"மணிப்பூர் கலவரம் - விசாரணைக்குழு அமைப்பு" மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்!

"மணிப்பூர் கலவரம் - விசாரணைக்குழு அமைப்பு" மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம்!

மணிப்பூர் கலவரம் தொடர்பாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.

மணிப்பூரில் தங்களுக்கு பழங்குடியின் அந்தஸ்து வேண்டி மெய்தி சமூகத்தினர் போராட்டம் நடத்திய நிலையில், இதற்கு குகி பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வெடித்த கலவரத்தில் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டு 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் மாநில நிலை குறித்து ஆராய 3 நாள் பயணமாக மணிப்பூருக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இம்பாலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய 6 சம்பவங்கள் தொடர்பாக CBI விசாரணை நடத்தும் எனக் கூறிய அவர், ஒட்டுமொத்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்தும் உத்தரவிட்டார்.

இதையும் படிக்க : ”முதலாம் ஆண்டை போலவே, 2 ஆம் ஆண்டிலும் தமிழ்ப்பாடம் கட்டாயமாக்கப்பட வேண்டும்” ராமதாஸ் வலியுறுத்தல்!

கலவரத்தில் ஈடுபட்ட மெய்தி, குகி இன பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்ததாகவும் அமித்ஷா கூறினார். இணையத்தில் பரவும் போலித் தகவல்களை நம்ப வேண்டாம் என மக்களை கேட்டுக்கொண்ட அவர், சட்டவிரோத ஆயுதங்களை சமூக விரோதிகள் ஒப்படைக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்கக் கூடும் எனவும் எச்சரித்தார். ஆன்லைன் கல்வியும் தேர்வுகளும் திட்டமிட்டப்படி நடைபெறும் எனவும் பாதிக்கப்பட்டோரை கவனித்துக்கொள்ள, தலா 20 பேர் கொண்ட 8 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்படுவதாகவும் அவர் கூறினார். கலவரத்தில் மேலும் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு 5 லட்ச ரூபாய் மத்திய அரசு இழப்பீடாக வழங்கும் எனவும் அமித்ஷா உறுதியளித்தார்.