”அனைத்து சவால்களையும் சிரமங்களையும் ஒன்றாக சந்திப்போம்” - அனில் சௌகான்

”அனைத்து சவால்களையும் சிரமங்களையும் ஒன்றாக சந்திப்போம்” - அனில் சௌகான்

நாட்டின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முப்படை தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌஹான் இன்று பதவியேற்றார். முன்னதாக, டெல்லியில் உள்ள போர் நினைவிடம் மற்றும் அமர் ஜவான் ஜோத் ஆகிய இடங்களுக்கு சென்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். சௌஹானுடன் அவரது தந்தை சுரேந்திர சிங் சௌஹானும் போர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத் இறந்த ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர் புதிய முப்படை தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

சவால்களை ஒன்றாக சந்திப்போம்: 

முப்படை தலைமை தளபதியாக பொறுப்பேற்றதும்,ஜெனரல் சௌஹான் "இந்திய ஆயுதப்படையில் மிக உயர்ந்த பதவியில் இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன். பாதுகாப்புப் படைகளின் பிரதானி என்ற வகையில் முப்படையினரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற முயற்சிப்பேன். அனைத்து சவால்களையும் சிரமங்களையும் ஒன்றாக சந்திப்போம்.” எனக் கூறியுள்ளார்.

பணிகள்:

புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக, அனில் சௌஹான் முப்படைகளுக்கும் இடையேயான ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துவார். ராணுவ விவகாரங்கள் துறை செயலாளராகவும் அனில் சௌஹான் பணியாற்றுவார்.

கடந்து வந்த பாதை:

கடந்த புதன்கிழமை மத்திய அரசு அவரை முப்படை தலைமை தளபதியாக நியமித்தது. இவர் 11வது கோர்க்கா ரைபிள்ஸ் படையைச் சேர்ந்தவர். மறைந்த முன்னாள் முப்படை தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத்தும் இந்தப் படைப்பிரிவைச் சேர்ந்தவராவார்.  லெப்டினன்ட் ஜெனரல் சவுகான் 2019ல் பாலகோட் வான்வழித் தாக்குதலின் போது  இராணுவ நடவடிக்கைகளின் இயக்குநராக  இருந்தார் . அப்போது, ​​புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய ராணுவம் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத பயிற்சி மையங்களை அழித்தது குறிப்பிடத்தக்கது.