இந்தியாவில் 13 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்த கொரோனா பாதிப்பு...

நாடு முழுவதும் புதிதாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது.

இந்தியாவில் 13 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்த கொரோனா பாதிப்பு...

கொரோனா 2வது அலைக்கு பின், தினசரி பதிவாகும் கொரோனா நிலவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்  வெளியிட்டு வருகிறது. அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா உறுதி ஆகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 42 லட்சத்து 73 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. தீவிர தொற்றுக்கு தற்போது வரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 272 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிய தொற்று எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக, தற்போது சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை 247 நாட்களுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 14 ஆயிரத்து 667 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவிலிருந்து மீண்டோரின் எண்ணிக்கை 3 கோடியே 36 லட்சத்து 55 ஆயிரத்து 842 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தீவிர தொற்றுக்கு 446 பேர் பலியாகி இருப்பதாகவும், இதனால் கொரோனாவில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 58 ஆயிரத்து 186 ஆக உயர்ந்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தற்போது வரை 106 கோடியே 14 லட்சத்து 40 ஆயிரத்து 335 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.