ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்கள்...இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது...!

ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்கள்...இன்று விண்ணில் செலுத்தப்படவுள்ளது...!
Published on
Updated on
1 min read

ஒரே நேரத்தில் 36 செயற்கைக்கோள்கள் இஸ்ரோவின் எல்.வி.எம் 3 - எம் 3 ஏவுகணை மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று விண்ணில் ஏவப்படுகிறது.

நாட்டின் வளர்ச்சிக்காகவும், தொலைத்தொடர்புக்காகவும் செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வந்த நிலையில், உலக அளவில் வளர்ந்த நாடுகள் இதனை மாற்றி வணிகப் பயன்பாட்டிற்கு செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது. அந்த வகையில் இஸ்ரோவின் வணிகப்பிரிவான 'நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம்' வணிக நோக்கில் வெளிநாட்டு மற்றும் தனியார் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக பிரிட்டனை மையமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான ஒன் வெப் நிறுவனமானது, தனது 72 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோவின் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது.

அதனடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதற்கட்டமாக ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்களை எல்விஎம்- 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாம் மற்றும் கடைசி கட்டமாக மேலும் 36 செயற்கைக்கோள்கள் ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து இன்று விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 

மொத்தம் 5 ஆயிரத்து 805 கிலோ எடை கொண்ட 36 செயற்கை கோள்களும் 450 கிலோ மீட்டா் தொலைவில் தாழ்வான புவி வட்டப்பாதையில் 87 புள்ளி 4 டிகிரி கோணத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளன. ஏற்கனவே, ஒரே நேரத்தில் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி அவற்றை துல்லியமாக நிலைநிறுத்தி வரலாற்று வெற்றியை பெற்ற இஸ்ரோ நிறுவனம், தற்போது அதே எல்.வி.எம். 3 ராக்கெட் மூலம் மீண்டும் 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வணிக ரீதியாக வெற்றி பெற தயாராகி வருகிறது. 

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com