சிபிஐ தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர் !!

டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜராகி விளக்கமளித்து வருகிறார். 

சிபிஐ தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜர் !!

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சீன பிரஜைகளுக்கு விசா வழங்குவதற்கு 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 5க்கும் மேற்பட்டோர் மீது சிபிஐ அதிகாரிகள்  வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் லஞ்சம் பெறப்பட்டது தொடர்பாக கடந்த 17ஆம் தேதி ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தினர். டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 9 இடங்களில் ஒரே நேரத்தில் சிபிஐ அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர்.  

இதன்பின், சென்னையில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல் விதித்து கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. வெளிநாடு சென்ற கார்த்தி சிதம்பரம் நாடு திரும்பிய 16 மணி நேரத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் டெல்லியில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் இன்று ஆஜராகி உள்ளார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.