ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் பூதாகரமான நிலையில் அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலகல்!!

கர்நாடகாவில் அரசு ஒப்பந்ததாரர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அம்மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார் ...

ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் பூதாகரமான நிலையில் அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி விலகல்!!

கர்நாடக மாநிலம் பெலகாவியை சேர்ந்த அரசு ஒப்பந்ததாரரான சந்தோஷ் பாட்டீல், அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஈஸ்வரப்பா 40 சதவீதம் வரை லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் கடந்த 12ம் தேதி உடுப்பில் உள்ள சொகுசு விடுதியில் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் தனது சாவுக்கு ஈஸ்வரப்பாவே காரணம் எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

இதையடுத்து ஈஸ்வரப்பா உடனடியாக பதவி விலக வேண்டுமெனவும், அவரை கைது செய்ய வேண்டுமெனவும் கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வந்தன. எதிர்க்கட்சிகளின் அழுத்தம் அதிகரித்த நிலையில் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக ஈஸ்வரப்பா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்த அவர் முறைப்படி ராஜினாமா கடிதத்தை வழங்கினார். எனினும் இந்த விவகாரத்தில் ஈஸ்வரப்பா பதவி விலகியது மட்டும் போதாது எனவும் அவரைக் கைது செய்யும் வரை தொடர்ந்து போராடப் போவதாகவும் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.