கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம்...ராகுல்காந்தி கூறியது என்ன?

கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம்...ராகுல்காந்தி கூறியது என்ன?

கர்நாடக முதலமைச்சராக சித்தராமையா பதவியேற்ற நிலையில், முதல் அமைச்சரவைக் கூட்டம் பெங்களூருவில் கூடியது.

கர்நாடகாவில் 224 தொகுதிகளில் 135 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. தொடர்ந்து 5 நாட்கள் இழுபறிக்குப் பின் சித்தராமையா முதலமைச்சராகவும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்பார்கள் என காங்கிரஸ் அறிவித்தது. இந்நிலையில் பெங்களூருவின் கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில், மாநில ஆளுநர் தாசர்வந்த் கெலாட் பதவிப்பிரமாணம் செய்து வைக்க, 2ம் முறையாக சித்தராமையா முதலமைச்சராக பதவியேற்றார்.

தொடர்ந்து டி.கே.சிவகுமாரும் துணை முதலமைச்சராக பதவியேற்றார். இவர்களுடன் ஜி.பரமேஸ்வரா, கே.எச்.முனியப்பா, கே.ஜே.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல், சதீஷ் ஜர்கிஹோலி, ராமலிங்க ரெட்டி, பி.இசட். ஜமீர் அகமதுகான் மற்றும் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரியங்க் கார்கே உள்ளிட்ட 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இதையும் படிக்க : ட்விட்டருக்கு சவாலாக வருகிறது இன்ஸ்டா...! பயனாளர்களின் அதிருப்தி தான் காரணமா...?

இந்நிகழ்வில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 5 மாநில முதலமைச்சர்களும், நடிகர் கமல்ஹாசன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் சித்தராமையா தலைமையிலான 2023ம் ஆண்டின் முதல் அமைச்சரவைக் கூட்டம் பெங்களூருவில் விதன சவுதாவில் தொடங்கியது. முன்னதாக அமைச்சரவைக் கட்டிடம் முன்பு, விழுந்து கும்பிட்டு துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் கூட்டத்திற்குச் சென்றார். முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், காங்கிரசின் 5 வாக்குறுதிகளும் சட்டங்களாக மாறும் என ராகுல்காந்தி கூறியது குறிப்பிடத்தக்கது.