'கா்நாடக சட்டப்பேரவை தோ்தல்' தொடங்கியது வாக்கு எண்ணிக்கை...!!

'கா்நாடக சட்டப்பேரவை தோ்தல்' தொடங்கியது வாக்கு எண்ணிக்கை...!!

கடந்த 10-ம் தேதி நடைபெற்ற கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் வாக்கு எண்ணிக்கை சற்று முன்னர் தொடங்கியது.

கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதில் 224 தொகுதிகளிலும் சராசரியாக 72.67 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இத்தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சோ்ந்த 2,615 வேட்பாளா்கள் போட்டியிட்டுள்ளனா். இதில் காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், பாஜக 224 தொகுதிகளிலும், மஜத 209 தொகுதிகளிலும் வேட்பாளா்களை நிறுத்தியிருந்தன. இது தவிர, சிபிஐ, சிபிஎம், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற பல கட்சிகள் தோ்தலில் போட்டியிட்டுள்ளன. ஆனாலும் பாஜக, காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

கா்நாடகம் முழுவதும் 58,545 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள 75,603 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகளில் முத்திரையிடப்பட்டு மாநிலத்தின் 36 வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் வேட்பாளா்களின் வெற்றி, தோல்வி நிலவரம் நண்பகல் 12 மணிக்குள் தெரிய வரலாம் எனக் கூறப்படுகிறது.

கர்நாடக மாநிலம் முழுவதும் மொத்தம் 34 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில் பெங்களூரில் 4 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையின்போது அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க இம்மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.