இணைந்த கைகள்... திருப்பத்தை ஏற்படுத்துமா கர்நாடகா?

பாஜகவிற்கு எதிரான ஒற்றுமையை காட்ட ஒன்றுகூடிய காங்கிரஸ்.  ஊழல் வகுப்புவாத அரசியலை நீக்குவதே ஒரே குறிக்கோள்

இணைந்த கைகள்... திருப்பத்தை ஏற்படுத்துமா கர்நாடகா?

பிறந்தநாள் கொண்டாட்டம்:

கார்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் சித்தாராமையாவின் 75வது பிறந்தநாளில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கர்நாடகாவில்  ஒன்றுகூடி அவர்களின் வலுவை காட்டியுள்ளனர்.  2023ம் ஆண்டு சட்டமன்ற தெர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களே உள்ள நிலையில் கட்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இக்கூட்டம் நடத்தப்பெற்றுள்ளதாக தெரிகிறது.

ராகுல்காந்தி:

கர்நாடகாவில் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  பிறந்தநாள் கொண்டாடத்தில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ்-பாஜக கூட்டணியை தோற்கடிக்க காங்கிரஸ் முழுமையாக ஒன்றுபட்டு போராட தயாராக இருக்கிறது என்று கூறினார்.  அதற்கு ஏற்றாற்போல வலுவான கூட்டணியாக சித்தாராமையாவும் சிவகுமாரும் இணைந்து கட்சி நலனுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் செயல்பட்டு வருகின்றனர் எனவும் ராகுல் பேசியுள்ளார்.

மேலும் பொதுவாக எந்த பிறந்தநாள் கூட்டங்களுக்கும் அவர் செல்வதில்லை என்றும் சித்தாராமையாவுடன் மகத்தான உறவு இருப்பதாலேயே வந்ததாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.  மக்கள் மீதான அவரது சிறப்பான செயல்பாடுகளை பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் பேசியுள்ளார். சித்தாராமையாவின் ஆட்சி காலத்தில் அரசை செயல்படுத்திய விதத்தையும் பாராட்டுவதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார்.

2023 சட்டமன்ற தேர்தல்:

இந்த கூட்டத்தில் 2023 சட்டமன்ற தேர்தலுக்கான தலைமை பற்றிய கருத்து எதுவும் தெரிவிக்கபடவில்லை.  2023 தேர்தலில் சித்தாராமையாவும் கர்நாடகாவின் காங்கிரஸ் தலைவர் சிவகுமாரும் இணைந்து சிறப்பாக செயல்படுவார்கள் எனவும் ராகுல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கர்நாடகா முன்னாள் முதலமைச்சர்:

விழாவில் பேசிய சித்தாராமையா அவருக்கும் சிவகுமாருக்கும் இடையே பிளவு உள்ளதாக தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது எனவும் இது முற்றிலும் தவறான கருத்து எனவும் கூறியுள்ளார்.  மேலும் அவர்களுக்குள் நல்ல புரிதல் உள்ளதாகவும் ஊழல் மற்றும் வகுப்புவாத அரசியலை அகற்றுவதே அவர்களது ஒரே குறிக்கோள் எனவும் அதற்காக இணைந்து பாடுபடுவோம் எனவும் பேசியுள்ளார் சித்தாராமையா.

கர்நாடக காங்கிரஸ் தலைவர்:

அவரைத் தொடர்ந்து பேசிய கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவகுமார் சித்தாராமையாவை பிற்படுத்தபட்ட வகுப்பின் தலைவராக மட்டுமே காட்சிப்படுத்தகூடாது என்று கூறினார். அவர் அனைத்து வகுப்பினருக்கும் பொதுவானவர் என்றும் அவருடைய தலைமையின் கீழ் வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் எனவும் கூறியுள்ளார் சிவகுமார்.