இரண்டரை ஆண்டுகளுக்கு பின் ஜம்மு-காஷ்மீர் பயணம் - பிரதமர் மோடிக்கு சம்பா மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு!!

பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக  ஜம்மு காஷ்மீர் சென்ற பிரதமர் மோடி, சம்பா மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு பின் ஜம்மு-காஷ்மீர் பயணம் - பிரதமர் மோடிக்கு சம்பா மாவட்டத்தில் உற்சாக வரவேற்பு!!

பஞ்சாயத்து ராஜ் தினத்தை முன்னிட்டு,  ஜம்மு காஷ்மீரில் உள்ள சம்பா மாவட்டத்தின் பள்ளி பஞ்சாயத்தில் பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து ராஜ் உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தநிலையில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, பிரதமர் மோடி முதன்முறையாக இன்று அங்கு சென்றுள்ளார்.  அவருக்கு துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா புகைப்படம் ஒன்றை பரிசளித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.

பஞ்சாயத்து ராஜ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன் அம்மாவட்டத்தின் பள்ளி கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இன்டாக் என்ற புகைப்பட கண்காட்சியையும் மோடி பார்வையிட்டார். தொடர்ந்து அவர் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய  திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

பிரதமர் வருகையை முன்னிட்டு விழா நடைபெறும் இடம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே இன்று காலை பிஷ்னா கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் மர்ம பொருள் வெடித்தது. அது வெடிகுண்டாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில், விண்கற்கள் விழுந்திருக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பிரதமர் வருகையை ஒட்டி சம்பா மாவட்டத்தில் மன் கி பாத் நிகழ்ச்சி ரேடியோ வாயிலாக ஒளிப்பரப்பப்பட்டது. இதனை கேட்க மாவட்ட அதிகாரிகள், பாஜக நிர்வாகிகள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்களும் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.