சித்ரங் புயலில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக தகவல்.. மீட்புப் பணிகள் தீவிரம்..!

சித்ரங் புயலில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக தகவல்.. மீட்புப் பணிகள் தீவிரம்..!

வங்கதேசத்தில் மையம் கொண்டுள்ள சித்ரங் புயலில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சித்ரங் சூறாவளி புயல் - இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு

சித்ரங் சூறாவளி புயல், வங்கக் கடலில் சாகர் தீவு பகுதியில் இருந்து தெற்கே 300 கிலோ மீட்டர் தூரத்திலும், பரிசால் பகுதியில் இருந்து 580 கிலோ மீட்டர் தெற்கு-தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது. இது தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று தற்போது வங்கதேசத்தை நெருங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல், தின்கோனா தீவு-  சண்ட்விப் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் மேற்குவங்கம், ஒடிசா கடற்கரை பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மீட்பு பணிகள் தீவிரம்

இந்த நிலையில் வங்கதேசத்தில் சித்ரங் புயலால் ஐந்து பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து மீதம் உள்ளவர்களை மீட்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும்,  கனமழை முன்னெச்சரிக்கையை தொடர்ந்து மேற்குவங்கத்தின்  24 பர்கானாஸ் பகுதியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஆம்புலன்ஸ், படகு உள்ளிட்டவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. பக்காளி கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதித்துள்ள மீட்பு குழுவினர், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.